கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார்


கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார்
x

பெங்களூருவில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார். இதில் ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

கடும் போட்டி

அந்த கட்சி 34 ஆண்டுக்கு பிறகு 135 இடங்களில் இமாலய வெற்றியை ருசித்துள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்தது. இதில் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து இருவரையும் டெல்லிக்கு அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் சித்தராமையா முதல்-மந்திரி ஆக டி.கே.சிவக்குமார் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடித்தது.

சோனியா காந்தி சமாதானப்படுத்தினார்

இறுதியில் சோனியாகாந்தி சிம்லாவில் இருந்தபடி செல்போனில் டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்தினார். கட்சியின் நலன், அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எடுத்துள்ள முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், உங்களுடன் நான் இருப்பேன் என்றும் கூறி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அவர் சித்தராமையாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்தார். அதன்படி சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் முதல் 2½ ஆண்டுக்கு சித்தராமையா முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த 2½ ஆண்டுக்கு டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

சித்தராமையா தேர்வு

அத்துடன் டி.கே.சிவக்குமாரின் கோரிக்கையை ஏற்று, ஒரே ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த பதவி டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே வழங்கியும் காங்கிரஸ் அறிவித்தது. மேலும் வருகிற 20-ந்தேதி (அதாவது நேற்று) பதவி ஏற்பு விழா நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 18-ந் தேதி பெங்களூரு திரும்பிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் சித்தராமையா முதல்-மந்திரியாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ராஜ்பவனுக்கு சென்ற சித்தராமையா கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். உடனே கவர்னர், ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்து கடிதம் வழங்கினார்.

யார்-யாருக்கு மந்திரி பதவி

இந்த பணிகள் நிறைவடைந்த உடனே நேற்று முன்தினம் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து பேசிய அவர்கள், யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதில் முதல்கட்டமாக 8 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அன்றைய தினம் இரவே பெங்களூரு திரும்பினர்.

சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்கும் விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று மதியம் 12.40 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. பிரமாண்ட மேடையும், 50 ஆயிரம் பேர் அமர இருக்கைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பதவி ஏற்பு விழாவை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஆங்காங்கே பிரமாண்ட திரையிலும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பதவி ஏற்பு விழா தொடங்கியதும் முதலில் சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சித்தராமையா கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சித்தராமையா கடந்த 2013-ம் ஆண்டு மாநில முதல்-மந்திரியாக இருந்தார். தற்போது அவர் 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சித்தராமையா கடவுள் பெயரிலும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது இஷ்ட தெய்வமான கங்காதர அஜ்ஜய்யா பெயரிலும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

8 பேர் மந்திரிகள்

அதன் பிறகு 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கும் கவர்னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதாவது பரமேஸ்வர், கே.ஜே.ஜார்ஜ், கே.எச்.முனியப்பா, சதீஸ் ஜார்கிகோளி, எம்.பி.பட்டீல், ராமலிங்கரெட்டி, பிரியங்க் கார்கே, ஜமீர்அகமது கான் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

இதில் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி, புத்தர், பசவண்ணர், அம்பேத்கர் பெயரில் பதவி ஏற்றுக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மந்திரி பரமேஸ்வர் அரசியல் சாசனத்தின் பெயரில் பதவி ஏற்றார். மற்றவர்கள் கடவுளின் பெயரில் பதவி ஏற்றுக்கொண்டனர். அதில் ஜமீர் அகமதுகான் ஆங்கிலத்தில் உறுதிமொழியை வாசித்து அல்லா மற்றும் தாயின் பெயரில் பதவி ஏற்றார்.

கலந்து கொண்டவர்கள்

அதைத்தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து கவர்னருடன் புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். பிறகு கவர்னர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகூ, சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும்,

நடிகருமான கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி, தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, எம்.பி.க்கள் கார்த்திக் ப.சிதம்பரம், விஜய் வசந்த், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மக்களவை துணை தலைவர் சபா கக்கோலி கோஷ் தஸ்திகான், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியில் இருந்து பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் சமாத், ராஷ்டிரிய லோக் தள் சார்பில் ஜெயந்த் சவுத்ரி, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் லல்லான் சிங், நடிகர்கள் சிவராஜ்குமார், துனியா விஜய், சாது கோகிலா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கா்நாடக காங்கிரசின் முன்னணி நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புதிய முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாவின் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து கூறினார்.

இந்த விழாவையொட்டி கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்க ஏராளமானவர்கள் வந்ததால் கன்டீரவா ஸ்டேடியத்தின் முன் பகுதியில் நெரிசல் உண்டானது. அந்த ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

5 திட்டங்களுக்கு ஒப்புதல்

பதவி ஏற்பு விழாவை தொடர்ந்து சித்தராமையா மற்றும் மந்திரிகள் விதான சவுதாவுக்கு வந்தனர். நேற்றே முதல் மந்திரிசபை கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் 5 முக்கிய வாக்குறுதிகள் அதாவது வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000, பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கும் திட்டம், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம் புதிய அரசு அமைந்த முதல் நாளே கர்நாடக மக்களுக்கு பம்பர் பரிசு கிடைத்துள்ளது. ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படியே 5 திட்டங்களையும் நிறைவேற்றுவதாக சித்தராமையா தாலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story