கோலாரில் சித்தராமையா போட்டியிடுவது உறுதி


கோலாரில் சித்தராமையா போட்டியிடுவது உறுதி
x
தினத்தந்தி 29 Nov 2022 2:40 AM IST (Updated: 29 Nov 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவது உறுதி என்று அத்தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசகவுடா கூறியுள்ளார்.

கோலார்-

சந்திக்க முடியவில்லை

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும், மைசூரு மாவட்டம் சாமுண்டி தொகுதியிலும் போட்டியிட்டார்.

இதில் பாதாமி தொகுதியில் மட்டும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சாமுண்டி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த நிலையில் சித்தராமையா தனது தொகுதியை மாற்ற முடிவு செய்துள்ளார். அவர் பெங்களூருவுக்கு அருகில் உள்ள கோலார் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. பெங்களூருவில் இருந்து பாதாமி தொகுதி மிக தூரத்தில் உள்ளதால், தன்னால் அடிக்கடி அங்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என்று சித்தராமையா கூறி இருந்தார்.

கோலாரில் போட்டி உறுதி

இந்த நிலையில் சித்தராமையா கடந்த வாரம் கோலாருக்கு சென்றார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று கூறினார். இந்த நிலையில் கோலார் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசகவுடா நிருபர்களிடம் கூறுகையில், "கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவது உறுதி. அதன் அடிப்படையிலேயே அவர் சமீபத்தில் கோலாருக்கு வந்து சென்றார். எனது தொகுதியை சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன். அவரது வெற்றிக்காக நான் பாடுபடுவேன். கோலார் காங்கிரசில் கருத்து வேறுபாடுகள் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையக உள்ளோம்'' என்றார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சீனிவாசகவுடா எம்.எல்.ஏ., அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் காங்கிரசுக்கு ஆதரவாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story