வருணா தொகுதியில் சித்தராமையா-சோமண்ணா அனல் பறக்கும் பிரசாரம்


வருணா தொகுதியில் சித்தராமையா-சோமண்ணா அனல் பறக்கும் பிரசாரம்
x

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வருணா தொகுதயில் சித்தராமையா-சோமண்ணா அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மைசூரு:-

வருணா தொகுதி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை களம் சூடுபிடித்துள்ளது. தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தொகுதியாக மைசூரு மாவட்டம் வருணா சட்டசபை தொகுதி உள்ளது. நட்சத்திர தொகுதியாக உள்ள இங்கு, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மந்திரியும், லிங்காயத் தலைவருமான வி.சோமண்ணா பா.ஜனதா சார்பில் களமிறங்கி உள்ளார். இதனால் வருணா தொகுதியை அனைவரும் உற்று நோக்கி வருகிறார்கள்.

அனல் பறக்கும் பிரசாரம்

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையாவுக்கு அதிர்ச்சி அளிக்க, பா.ஜனதா லிங்காயத்தில் பலம் வாய்ந்த தலைவரான சோமண்ணாவை வருணாவில் நிறுத்தி உள்ளது. சோமண்ணா சார்ந்த லிங்காயத் சமூக மக்கள் வருணாவில் அதிகம் வசித்து வருகிறார்கள் என்பதால் அவரை பா.ஜனதா மேலிடம் நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வருணா தொகுதியில் சித்தராமையாவும், சோமண்ணாவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் சோமண்ணாவுக்கு ஆதரவாக மத்திய மந்திரி அமித்ஷா வருணா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

சித்தராமையா

மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வந்த சித்தராமையா, நேற்று தனக்காக வருணா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இன்றும் வருணாவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதேநேரத்தில் மந்திரி சோமண்ணாவும் வருணாவில் தங்கி இருந்து தொடர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒரே நேரத்தில் சித்தராமையாவும், சோமண்ணாவும் வருணாவில் பிரசாரம் மேற்கொண்டு வருவதால் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

இருவரும் வெவ்வேறு கிராமங்களில் திறந்த வாகனங்களில் வீதி, வீதியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

நடிகர் சிவராஜ்குமார்

இந்த நிலையில் சித்தராமையாவை ஆதரித்து நட்சத்திர பட்டாளமே வருணாவில் குதித்துள்ளது. பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா ஆகியோர் வருணாவில் பிரசாரம் செய்தனர். மேலும் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார், ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மது பங்காரப்பா, யதீந்திரா ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

நேற்று காலை 9 மணி அளவில் சித்தராமையாவும், நடிகர் சிவராஜ்குமாரும் ஒரே காரில் வருணா தொகுதிக்குட்பட்ட கோடன்பூர், தாண்டவபுரா, கெம்பசித்தனஉண்டி உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் செய்தனர். அனைத்து கிராமங்களிலும் அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'சித்தராமையா வாழ்க.. சிவராஜ்குமார் வாழ்க..' என்ற கோஷம் விண்ணை பிளந்தன.

சோமண்ணா

இதேபோல், பா.ஜனதா வேட்பாளர் சோமண்ணாவும் நேற்று வருணாவில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். அவர் வருணா தொகுதிக்குட்பட்ட 21 கிராமங்களில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின்போது சோமண்ணா கூறுகையில், சித்தராமையா மனது வைத்திருந்தால் வருணா தொகுதியை வளர்ச்சி அடைய செய்திருக்கலாம். ஆனால், தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. கல்லூரி இல்லை, மருத்துவமனை இல்லை, சரியான சாலை வசதி இல்லை. வருணா மட்டுமின்றி பாதாமி தொகுதியில் சித்தராமையா எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. வருணாவில் நான் வெற்றி பெற்றால், அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். இங்கு நிரந்தரமாக வீடு கட்டி மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பேன்.

சித்தராமையா வருணா தொகுதியில் பிரசாரத்திற்காக சினிமா நடிகர்-நடிகைகளை அழைத்து வந்துள்ளார். மக்களை கவரும் வகையில் திரை நட்சத்திரங்களுடன் சித்தராமையா வருகிறார். ராஜ்குமார் குடும்பத்துடன் எனக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளது. புனித் பெயரில் பிரமாண்ட மருத்துவமனையை கட்டி உள்ளேன். ஆனால் சிவராஜ்குமார் ஏன் இவ்வாறு செய்தார் என்பது எனக்கு ெதரியவில்லை என்றார்.


Next Story