கோலாரில் சித்தராமையா தோல்வி அடைவார்
கோலாரில் சித்தராமையா தோல்வி அடைவார் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடுமையாக உழைப்போம்
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கோலாரில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைப்போம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். கோலாரில் சித்தரமையா தோல்வி அடைவார். அவரை உள்ளூர் தலைவர்கள் தவறாக வழிநடத்தியுள்ளனர். நான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியது ஏன் என்பது சித்தராமையாவுக்கு நன்றாக தெரியும்.
ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்த காரணத்தால் நான் அக்கட்சியை விட்டுவிலகி பா.ஜனதாவில் சேர்ந்தேன். பா.ஜனதா கொள்கை-கோட்பாடுகள் அடிப்படையில் செயல்படுகிறது. ஆட்சி அதிகார தாகத்திற்காக பா.ஜனதா செயல்படுவது இல்லை. சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பகுதி காலத்தில் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டார். அதன் பிறகு ஆட்சி அதிகார ஆசையில் அவர் காங்கிரசில் சேர்ந்தார்.
மருத்துவ உபகரணங்கள்
சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியபோது, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் சொல்கிறது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். நாங்கள் லோக்அயுக்தாவுக்கு முழு அதிகாரத்தை கொடுத்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் அந்த அமைப்பின் அதிகாரம் பறிக்கப்பட்டது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.