சொத்து விவகாரத்தில் சித்தி கொலை: வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து


சொத்து விவகாரத்தில் சித்தி கொலை:  வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் சொத்து விவகாரத்தில் நடந்த சித்தி கொலை வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் சொத்து விவகாரத்தில் நடந்த சித்தி கொலை வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சொத்து பிரச்சினையில் கொலை

பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கனகாம்பரம். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கனகாம்பரம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சி.கே.அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகாம்பரத்தின் கணவரின் சகோதரர் மகனான கிருஷ்ணா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், சொத்து விவகாரத்தில் கனகாம்பரம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இந்த கொலை தொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்தது. இதனை விசாரித்த கோர்ட்டு சொத்து விவகாரத்தில் சித்தியை கொலை செய்த கிருஷ்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி இருந்தது. இதையடுத்து, பெங்களூரு சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார்.

மகனுக்கு ஆயுள் தண்டனை ரத்து

இதற்கிடையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரியும், பெங்களூரு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் கிருஷ்ணா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது தனியாக வசித்த கனகாம்பரத்தை கிருஷ்ணா தான் கொலை செய்தார்? என்பதற்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை.

எனவே கிருஷ்ணாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது, இதுதொடர்பாக கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் கிருஷ்ணா 9 ஆண்டுகள் 9 மாதம் 11 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரை விடுதலை செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story