சிவமொக்கா மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை
சிவமொக்கா மத்திய சிறையில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சிவமொக்கா;
மத்திய சிறையில் சோதனை
சிவமொக்கா நகரையொட்டிய சோகானே பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் தண்டனை கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறைச்சாலையில் கஞ்சா பயன்பாடு மற்றும் செல்போன் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தலைமையிலான போலீசார், சிவமொக்கா மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சிறையில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
எச்சரிக்கை
இந்த சோதனையில் கைதிகளின் அறைகளில் இருந்து கஞ்சா, பீடி, சிகரெட், தீப்பெட்டிகள் மற்றும் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கஞ்சா, செல்போன் ஆகியவை எப்படி உள்ளே வந்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். மேலும் அங்கிருந்த கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சிறையில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அலட்சியமாகவும், கைதிகளுக்கு உடந்தையாகவும் இருக்கக்கூடாது என்றும் சிறை அதிகாரிகள், காவலர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார். மேலும் சிவமொக்கா மத்திய சிறையில் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி சோதனை
இதுகுறித்து அவர் கூறுகையில், சிவமொக்கா சிறையில் கடந்த 4 மாதங்களாக எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. சிறையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் செல்போன் பயன்பாடு இருப்பதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த சோதனை நடந்துள்ளது. அங்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அடிக்கடி சிறையில் சோதனை நடத்தப்படும் என்றார்.
போலீஸ் சூப்பிரண்டின் இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.