சிவராத்திரீஸ்வரர்-மாதேஸ்வரர் கோவில்


சிவராத்திரீஸ்வரர்-மாதேஸ்வரர் கோவில்
x

மைசூருவில், சுத்தூர் மடம் சார்பில் சிவராத்திரீஸ்வரர்-மாதேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மைசூரு:-

தேரோட்டம்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் மடத்தின் வளாகத்தில் ஆதியோகி சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரருக்கு சுத்தூர் மடம் சார்பில் விழா நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதையடுத்து சுத்தூர் மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி தலைமையில், மைசூரு மன்னர் யதுவீர், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் வாழைப்பழத்தில் மரிக்கொழுந்து, நவதானியங்கள், நாணயங்கள் ஆகியவற்றை திணித்து தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். வேண்டுதல் இல்லாதவர்கள் இவ்வாறு வீசினர். அப்படி செய்தால் வாழ்வில் புனிதம் அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவும், மன்னர் யதுவீரும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

அதையடுத்து மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தேரோட்டம் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆடல், பாடலுடன், பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக நடந்தது.

அன்னதானம்

தேரோட்ட முடிவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தேரோட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story