லாரி-கார் மோதி விபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் நசுங்கி சாவு


லாரி-கார் மோதி விபத்து:  பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் நசுங்கி சாவு
x

யாதகிரி அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் நசுங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

யாதகிரி: யாதகிரி அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் நசுங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கார்-லாரி மோதல்

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ஹட்டியில் வசித்து வந்தவர் முகமது நாசீர் உசேன் (வயது 76), இவரது மனைவி நூர்ஜகான் பேகம் (70). இந்த தம்பதியின் மகன் வாஜித் உசேன் (32), இவரது மனைவி ஹீனா (30). இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் உமேஜா என்ற பெண் குழந்தை இருந்தது. முகமது நாசீர் உசேனின் சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் கோடங்கல் ஆகும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முகமது நாசீர் உசேன் தனது குடும்பத்தினருடன் காரில் ஹட்டியில் இருந்து கோடங்கல்லுக்கு சென்று இருந்தார். காரை முகமது நாசீர் உசேனின் உறவினரான இம்ரான் (22) என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் நேற்று கோடங்கல் கிராமத்தில் உள்ள தர்காவுக்கு முகமது நாசீர் தனது குடும்பத்தினருடன் சென்று இருந்தார். பின்னர் குழந்தை உள்பட 7 பேரும் காரில் ஹட்டிக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகா அரகேரா (கே) கிராமத்தில் நேற்று நள்ளிரவில் சென்ற போது எதிரே வந்த லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

6 பேர் சாவு

இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி குழந்தை உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி சென்று விட்டார். விபத்து பற்றி அறிந்ததும் குருமித்கல் போலீசார், யாதகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேதமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குருமித்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் யாதகிரியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story