கர்நாடகத்தில் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கலா?- பரபரப்பு தகவல்கள்
கர்நாடகத்தில் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கலா என்பதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பி.எப்.ஐ. அலுவலகத்தில் சோதனை
பெங்களூருவில் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி பகுதிகளில் கடந்த 2020-ம் ஆண்டில் அரங்கேற்றிய வன்முறையை போல, கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட சதி திட்டம் தீட்டப்படுவதாக கே.ஜி.ஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களில் 2 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கைதான 15 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கைதான 15 பேரையும் பெங்களூரு பென்சன் டவுன் எஸ்.கே. கார்டன் பகுதியில் உள்ள பி.எப்.ஐ. தலைமை அலுவலகத்திற்கு நேற்று போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர். இந்திய குடியுரிமை சட்டம், ஹிஜாப் பிரச்சினைகள் நடந்த போது கைதான 15 பேரும் இந்த அலுவலகத்தில் வைத்து தான் ஆலோசனை நடத்தி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் தான் நேற்று அவர்களை பி.எப்.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஸ்லீப்பர் செல்கள்
இந்த நிலையில் கைதான 15 பேரின் போலீஸ் காவலும் இன்னும் ஒரிரு நாட்களில் நிறைவு பெற உள்ளது. ஆனால் அவா்களை மீணடும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக கோர்ட்டில் 36 அம்சங்களை உள்ளடக்கிய ஒரு கடிதத்தை போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். அந்த கடிதத்தில், கைதான 15 பேரும் கல்லூரி மாணவர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர வைக்க முயற்சிகளை செய்து வந்ததாக கூறப்பட்டு உள்ளது.
மேலும் 15 பேரும் பிற மாநிலங்களுக்கும் சென்று கூட்டங்களை நடத்தி வந்து உள்ளதாகவும், நாட்டிற்கு எதிராக செயல்படுவது எப்படி என்று பயிற்சி அளித்து வந்தததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கி இருப்பதுடன் அவர்கள் வன்முறையை ஏற்படுத்த சதி செய்து வருவதாகவும், பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த ஸ்லீப்பர் செல்களுடன் 15 பேரும் தொடர்பில் இருந்தததாகவும் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசாரின் இந்த தகவல்கள் மூலம் கர்நாடகத்தில் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கி உள்ளார்களா? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.