இதுவரை 849 விபத்துகள்.... 155 பேர் பலி...


இதுவரை 849 விபத்துகள்.... 155 பேர் பலி...
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு தொழில்நுட்ப நகரமாக விளங்குகிறது. அதுபோல் கலாசாரத்திற்கு பெயர்ப்பெற்றது மைசூரு. இரு நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து நேரத்தை குறைக்க பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டது.

849 விபத்துகள்... 155 பேர் பலி...

இந்த சாலை பணிகள் முடிக்கப்பட்டு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு-மைசூரு இடையேயான பயண காலத்தை 4 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறைக்கும் வகையில் இந்த 10 வழி அதிவிரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் சர்வீஸ் (இணைப்பு) சாலைகள் என்பது கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் இந்த சாலையில் பறந்து வருகின்றன.

அதுவே அவர்களுக்கு எமனாகி போய்விடுகிறது என்பதற்கு அந்த சாலையில் நாள் தோறும் அரங்கேறி வரும் விபத்துக்களே சாட்சி. இந்த சாலை போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 849 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 155 பேர் தங்களது உயிரை பலி கொடுத்துள்ளனர். அத்துடன் 213 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ராமநகர்-சென்னப்பட்டணா இடையே விபத்து அதிகம்

இதில் ராமநகர்-சென்னப்பட்டணா பைபாஸ் இடையிலான பகுதிகளில் மட்டுமே 279 விபத்துக்களில் 100 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ராமநகர்-சென்னப்பட்டணா இடையிலான 55.50 கிலோ மீட்டர் தூர சாலை அதிக விபத்துக்கள் நடக்கும் இடமாக அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட பகுதியில் தான் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து

வருகிறது. இதனால் இந்த சாலை காவு வாங்கும் சாலையாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வேகத்தடை இல்லை

இந்த சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். அதாவது வேகத்தடைகள் இல்லாதது, சாலையில் போக்குவரத்து விதி வரைகோடுகள் இல்லாதது, போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காதது விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளான உள்ளன. அத்துடன் 10 வழிச்சாலையில் சர்வீஸ் சாலை இல்லை என்பதால், சாலையோர கிராமங்களில் உள்ள மக்கள் அடிக்கடி சாலையை கடக்க முயற்சிப்பதும், அதனால் விபத்துக்கள் நடப்பதும் இதற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

குறிப்பாக இந்த விரைவுச்சாலையில் வழிகாட்டு பலகைகளையும் இதுவரை முறையாக வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. மேலும் விபத்தில் சிக்குபவர்களை மீட்க ஆம்புலன்ஸ் சேவை, அவசர சிகிச்சை பிரிவு இல்லாததும் விபத்துகளில் சிக்கியவர்கள் உயிரிழக்க நேரிடுவதும் அதிகரித்து வருகிறது. எனவே விபத்துக்களை தடுக்க போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அறிவியல் பூர்வமற்ற சாலை

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துக்களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கள் நடந்த பகுதிகளை கண்டறிந்து, அடையாளமிட்டு வருகிறோம். சில இடங்களில் அறிவியல் பூர்வமற்ற வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் அறிவிப்பு பலகை பொருத்துதல், வேகத்தடை, சென்சார் கருவிகள் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு பற்றி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story