இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற சிலர் முட்டுக்கட்டை பிரதமர் மோடி குற்றச்சாட்டு


இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற சிலர் முட்டுக்கட்டை பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Aug 2023 4:15 AM IST (Updated: 8 Aug 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, டெல்லி பாரத் மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

சுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், குறிப்பிட்ட சிலர், வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.

அதே சமயத்தில், நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில், ஊழல், குடும்ப அரசியல் போன்ற தீமைகள், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

நாட்டில் 'புதிய நடுத்தர வகுப்பு' என்ற வகுப்பு வளர்ந்து வருகிறது. அந்த வகுப்பு, ஜவுளி நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. சுதேசி தொடர்பாக புதிய புரட்சியும் வந்துள்ளது. வருகிற பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு மக்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்.

நாட்டில் கதர் விற்பனை அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு, இந்த அரசு பதவி ஏற்பதற்கு முன்பு, ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடிவரை விற்பனை இருந்தது. தற்போது, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் கைத்தறி, கதர், ஜவுளி துறை ஆகியவற்றை உலக சாம்பியன் ஆக்க முயன்று வருகிறோம். 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' என்ற திட்டத்தின்கீழ், பல்வேறு மாவட்டங்களில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்தியாவை பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வருவதில் ஜவுளி நிறுவனங்களும், ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story