ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரின் மகன் எரித்துக் கொலை
ராமநகர் அருகே கனகபுராவில் ஜனதாதளம்(எஸ்) பிரமுகரின் மகன் எரித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ராமநகர்:
ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர்
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மரலவாடி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தம்மண்ணா. இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பிரமுகர் ஆவார். இவருடைய மகன் கிரண்(வயது 28). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், தனது நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிரண் புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் நள்ளிரவு வரை வீட்டுக்கு திரும்ப வரவில்லை. கிரணை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கிராமத்தில் உள்ள தோட்டத்தின் அருகே பாதி உடல் எரிந்த நிலையில் கிரண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எரித்துக் கொலை
தகவல் அறிந்ததும் ஆரோஹள்ளி போலீசார் விரைந்து வந்து கிரணின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது கிரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுஅருந்தி உள்ளார். அந்த குடிபோதையில் கிரணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அதாவது கிரணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே இதற்கு முன்பே பணப்பிரச்சினை இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் கிரணின் கை, கால்களை கயிற்றால் கட்டியும், கழுத்தை இறுக்கியும், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தும் நண்பர்கள் கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து ஆரோஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரணின் நண்பர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கிரண் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும், அவரது தந்தையை முன்னாள் மந்திரி டி.சி.தம்மண்ணா, அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்.