எல்லை மோதலை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பதா? - சோனியா ஆவேசம்


எல்லை மோதலை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பதா? -  சோனியா ஆவேசம்
x

எல்லை மோதல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுப்பது பற்றி காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி ஆவேசமாக பேசினார்.

புதுடெல்லி,

அருணாசலபிரதேச மாநிலத்தில், தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் கடந்த 9-ந் தேதி, சீனப்படையினரின் அத்துமீறலால் இரு தரப்பிலும் நடந்த மோதல் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சபை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியபோது கூறியதாவது:-

அருணாசலபிரதேச எல்லை நிலைமை குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்த அனுமதி மறுப்பது தீவிரமான விஷயம் ஆகும். இது ஜனநாயகம் மீது மதிப்பு இல்லாத நிலையைக் காட்டுகிறது.வெளிப்படையான விவாதம், நாட்டின் பதில் அளிப்பை வலுப்படுத்தும். அரசின் கொள்கைகளை, நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை.

சீனா தொடர்ந்து நமது எல்லையில் ஊடுருவது என்பது மிகுந்த கவலைக்குரிய அம்சம் ஆகும். ஆனால் கடினமான தருணங்களில் தாக்குதல்களை முறியடிப்பதில் விழிப்புணர்வுடன் செயல்படும் நமது படைவீரர்களுடன் நாடு இணைந்து நிற்கிறது. நாடு தேசிய அளவிலான குறிப்பிடத்தக்க ஒரு சவாலை சந்திக்கிறபோது, அதை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது நமது மரபு ஆகும். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதில்லை என்பதில் தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது. இதனால் நாடாளுமன்றமும், அரசியல் கட்சிகளும், மக்களும் களத்தின் உண்மையான நிலைமையை அறியாமல் போகிற நிலை உள்ளது.

பிரிவினைக் கொள்கைகளை பின்பற்றுவது, வெறுப்புணர்வை பரப்புவது, சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவுகளை குறிவைப்பது போன்றவற்றால் அன்னிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாம் ஒரு நாடாக ஒன்றுபட்டு நிற்பதை அரசு கடினமாக்குகிறது. இத்தகைய பிளவுகள் நம்மை பலவீனப்படுத்துகின்றன. நம்மை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இது போன்ற தருணங்களில், நாட்டு மக்களை ஒன்றிணைக்க அரசு கடுமையாக முயற்சிக்க வேண்டும், அது அரசின் பொறுப்பும் ஆகும்.

எதற்காக சீனா இந்தியாவைத் தொடர்ந்து தாக்கத்துணிகிறது? இந்த தாக்குதல்களை முறியடிப்பதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன? மேலும் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற முக்கியமான பல கேள்விகளுக்கு இத்தகைய விவாதம் மூலம் பதில் கிடைக்கும்.

எதிர்காலத்தில் ஊடுருவல்கள் செய்யாமல் சீனாவைத் தடுப்பதில் அரசின் கொள்கை என்ன? சீனாவுடன் நமக்கு தொடர்ந்து கடுமையான வர்த்தக பற்றாக்குறை உள்ளது. நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட அங்கிருந்து இறக்குமதி செய்வது அதிகமாக உள்ளது. சீன ராணுவத்தின் விரோத போக்குக்கு பொருளாதார ரீதியில் ஏன் பதிலளிப்பு இல்லை? உலகளாவிய சமூகத்துக்கு ராஜதந்திர ரீதியில் அரசின் தொடர்பு என்ன?

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.


Next Story