பிரபல தாதா அதிக் கொலையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு..!


பிரபல தாதா அதிக் கொலையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு..!
x

பிரபல தாதா அதிக் அகமது கொலையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உத்தரபிரதேச போலீஸ் அமைத்துள்ளது.

லக்னோ,

கடந்த 15-ந் தேதி இரவு, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அதிக் அகமதுவையும், அவருடைய சகோதரர் அஷ்ரப்பையும் 3 பேர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஷாகஞ்ச் போலீஸ் நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இக்கொலையை விசாரிக்க பிரயாக்ராஜ் நகர போலீஸ் கமிஷனர் ரமித் சர்மா உத்தரவின்பேரில், 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறப்பு போலீஸ் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறியதாவது:-

சாட்சிகள் பதிவு, மின்னணு ஆதாரங்கள் சேகரித்தல், பதிவு செய்தல், தடயவியல் ஆய்வு, பாரபட்சமற்ற விசாரணை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக கூடுதல் துணை கமிஷனர் சதீஷ் சந்திரா இருப்பார். உதவி போலீஸ் கமிஷனர் சத்யேந்திர பிரசாத் திவாரி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை மேற்பார்வையிட 3 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. விஷ்வகர்மா நியமித்துள்ளார். பிரயாக்ராஜ் கூடுதல் டி.ஜி.பி. பானு பாஸ்கர் தலைமையில், பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனர் ரமித் சர்மா, தடயவியல் ஆய்வுக்கூட இயக்குனர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, தரமான விசாரணையையும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை நடப்பதையும் உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை நிலவரத்தை இந்த குழு மேற்பார்வையிடும் என்று டி.ஜி.பி. விஷ்வகர்மா கூறினார். சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வழிநடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story