சிறுத்தை பிடிபட வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை
சிறுத்தை பிடிபட வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) டவுன் பகுதியில் கோல்ப் விளையாட்டு மைதானம் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை பெலகாவி டவுன் பகுதிக்குள் புகுந்தது. அந்த சிறுத்தை பெலகாவி டவுனில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதான பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால் இதுவரையில் அந்த சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்கவில்லை. அவ்வப்போது அந்த சிறுத்தை மக்கள் கண்களில் தோன்றி வனத்துறையினரிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பெலகாவி டவுன் விஸ்வேசுவரய்யா நகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை வனத்துறையினரிடம் பிடிபட வேண்டியும் பூஜை நடந்தது. அதற்காக ஒரு சிறுத்தை பொம்மையை விநாயகர் சிலையின் காலடியில் வைத்து பக்தர்கள் தினமும் பூஜை செய்து வருகிறார்கள். இதை அப்பகுதியினர் பலரும் வினோதமாக பார்த்து வருகிறார்கள்.