பெங்களூரு சிறையில் பயங்கரவாதிகளை கண்காணிக்க தனிக்குழு-கூடுதல் டி.ஜி.பி. மாலினி கிருஷ்ணமூர்த்தி தகவல்


பெங்களூரு சிறையில் பயங்கரவாதிகளை கண்காணிக்க தனிக்குழு-கூடுதல் டி.ஜி.பி. மாலினி கிருஷ்ணமூர்த்தி தகவல்
x

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி கைதிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

சிறையில் கைதிகளுக்கு பயிற்சி

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடைய நபர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு, கேரளாவை சேர்ந்த பயங்கரவாதி நசீர் பயிற்சி அளித்தது தெரியவந்தது.

அதாவது சிறைக்குள் கொலை வழக்குக்காக அடைக்கப்பட்டு இருந்த 5 பேருக்கு, நசீர் பயிற்சி அளித்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மாலினி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

பயங்கரவாதிகளை கண்காணிக்க...

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை சிறை பாதுகாவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் பயங்கரவாதிகளை கண்காணிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சிறை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் பயங்கரவாதிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

பயங்கரவாதிகளின் பாதுகாப்பை அதிகரிக்க படிப்படியாக இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறையில் பயங்கரவாதிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சிறைக்கு மாற்ற முடிவு

இதற்கிடையில், பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்திலேயே புதிதாக மிகுந்த பாதுகாப்புடன் கூடிய சிறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெற உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய சிறை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதும், அந்த சிறைக்கு பயங்கரவாதிகள் மாற்றப்பட்டு தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story