அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு; போலீசாருக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு


அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு; போலீசாருக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக போலீஸ் அதிகாரிகள் மாநாடு பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கா்நாடகத்தில் சட்டவிரோத செயல்கள், குற்றங்கள் நடைபெற்றால் அதற்கு துணை போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகளை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு நாங்கள் அமைதியாகிவிட மாட்டோம். பொய் செய்திகள், வதந்திகளை பரப்பி அதன் மூலம் சமுதாயத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தினால், அத்தகையவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

முக்கிய விவகாரங்களில் புகார் கொடுக்கும் வரை போலீசார் காத்திருக்கக்கூடாது. மத்திய குற்றப்பிரிவுவை இன்னும் பலப்படுத்த புதிதாக 230 போலீசாரை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு தேவைப்பட்டால் புதிய கட்டிடம் கட்டி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த போலீஸ் அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

கலாசார காவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை அரசு சகித்துக்கொள்ளாது. உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். போலீசார் மக்களை தோழமை உணர்வுடன் அணுக வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வருகை தரும் ஏழைகள், சாமானிய மக்களுக்கு போலீஸ் துறை மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story