அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுபோட்டி மண்டியாவில் வருகிற 3-ந் தேதி நடைபெறும் என்று கலெக்டர் எச்.என்.கோபாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மண்டியா:-
மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் எச்.என்.கோபாலகிருஷ்ணா கலந்து கொண்டு, பேசியதாவது:- மண்டியாவில் உள்ள தாலுகாக்களில் வருகிற 24-ந் தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் 26-ந் தேதி சேகரிக்கப்படும். இந்த போட்டியாளர்கள் விவரங்கள் ஜனவரி மாதத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு தயாரானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும். அதன்படி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வருகிற ஜன.3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியானது பி.இ.எஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். இதனால் மைதானத்தில் வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள் கலந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கவேண்டும். குறிப்பாக குடிநீர், மருத்துவம், பாதுகாப்பு, கழிவறை வசதிகள் செய்து கொடுத்திருக்கவேண்டும். இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வாகும் அரசு ஊழியர்கள், மாநில அளவில் நடைபெறும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் சில ஆண்டுகளாக மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இனி அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.