எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு எழுத 2,860 மாணவர்கள் பதிவு; கலெக்டர் செல்வமணி தகவல்


எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு எழுத 2,860 மாணவர்கள் பதிவு;  கலெக்டர் செல்வமணி தகவல்
x

சிவமொக்கா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு எழுத 2,860 மாணவர்கள் பதிவுசெய்துள்ளதாக கலெக்டர் செல்வமணி தகவல் தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா;

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. 8½ லட்சம் மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 85.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.


இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு நடத்துவது குறித்து சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் செல்வமணி கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் துணை தேர்வு எழுதுவதற்காக 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிவமொக்கா தாலுகாவில் 4 மையங்களும், பத்ராவதியில் 2 மையங்களும், சிகாரிப்புராவில் 2 மையங்களும் மற்றும் ஒசநகர், சொரப், தீர்த்தஹள்ளியில் தலா 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

சிவமொக்காவில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வை எழுதுவதற்காக 2,860 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்வை அமைதியான முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story