கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 85.63 சதவீதம் பேர் தேர்ச்சி- 145 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்து சாதனை


கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 85.63 சதவீதம் பேர் தேர்ச்சி-  145 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்து சாதனை
x

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 85.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 145 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்

பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 85.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 145 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

85.63 சதவீத தேர்ச்சி

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் 3,444 மையங்களில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 436 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 73 ஆயிரத்து 881 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.63 ஆகும். இது கடந்த 2019-20-ம் ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21-ம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவிகள் 92.44 சதவீதம் பேரும், மாணவர்கள் 86.34 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி 88 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி 87.84 சதவீதமாகவும், தனியார் பள்ளிகள் தேர்ச்சி 92.29 சதவீதமாகவும் உள்ளன.

625 மதிப்பெண்கள்

ஆதிதிராவிடர் மாணவர்களில் 86.80 சதவீதம் பேரும், பழங்குடியினரில் 88.96 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 145 பேர் 625-க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 309 மாணவர்கள் 624 மதிப்பெண்களும், 472 பேர் 623 மதிப்பெண்களும், 615 பேர் 622 மதிப்பெண்களும், 706 பேர் 621 மதிப்பெண்களும், 773 பேர் 620 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 21 பேர் 625 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 பேரும், தனியார் பள்ளிகளில் 116 பேரும் முழு மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள். 19 ஆயிரத்து 125 பேர் கன்னடத்தில் 125 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 13 ஆயிரத்து 458 பேர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 2-வது மொழியில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துளளனர்.

நகர்ப்புற மாணவர்கள்

43 ஆயிரத்து 126 பேர் 3-வது மொழியில் முழு மதிப்பெண்களும், அறிவியலில் 6 ஆயிரத்து 592 பேரும், சமூக அறிவியலில் 50 ஆயிரத்து 782 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நகர்ப்புற மாணவர்கள் 86.64 சதவீதம் பேரும், கிராமப்புற மாணவர்கள் 91.32 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிகள் மூலம் படித்து தேர்வு எழுதிய மாணவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 875 பேர் ஏ நட்சத்திர கிரேடும், 1 லட்சத்து 82 ஆயிரத்து 600 பேர் ஏ கிரேடும், 1 லட்சத்து 73 ஆயிரத்து 528 பேர் பி நட்சத்திர கிரேடும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 பேர் பி கிரேடும், 87 ஆயிரத்து 801 பேர் சி நட்சத்திர கிரேடும், 14 ஆயிரத்து 627 பேர் சி கிரேடும் பெற்றுள்ளனர்.

பூஜ்ஜிய தேர்ச்சி

1,462 அரசு பள்ளிகள், 467 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,991 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2 அரசு பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என மொத்தம் 20 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதனால் அந்த பள்ளிகள் பூஜ்ஜிய தேர்ச்சி அடைந்துள்ளன.

மனநிலை பாதித்த மாணவர்கள் 66.48 சதவீதம் பேரும், கண்பார்வையற்ற மாணவர்கள் 91 சதவீதம் பேரும், காதுகேளாதோர் 84.11 சதவீதம் பேரும், உடல் ரீதியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் 80.66 சதவீதம் பேரும், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைந்தவர்களில் 85.32 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 32 கல்வி மாவட்டங்கள் ஏ கிரேடு தேர்ச்சியும், பெங்களூரு தெற்கு, யாதகிரி மாவட்டங்கள் பி கிரேடு தேர்ச்சியும் பெற்றுள்ளன.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

இந்த பேட்டியின்போது, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் செல்வக்குமார் உடன் இருந்தார்.

தமிழில் 50 சதவீத தேர்ச்சி

தமிழ் வழியில் படித்தவர்களில் 78 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இதில் 39 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 50 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கன்னடத்தில் 87.65 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 92.88 சதவீதம் பேரும், இந்தியில் 79.55 சதவீதம் பேரும், தெலுங்கில் 80.40 சதவீதம் பேரும், மராட்டியில் 86.24 சதவீதம் பேரும், உருதுவில் 76.9 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

துணைத்தேர்வு எப்போது?

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது. இதில் கலந்து கொண்டு தேர்வு எழுத விருப்பம் உள்ள தோல்வி அடைந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 2002-03-ம் ஆண்டில் இருந்து இதுவரை தோல்வி அடைந்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.370 ஆகவும், 2 பாடங்களுக்கு ரூ.461-ம், 3 பாடங்களுக்கு மேல் கட்டணம் ரூ.620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30-ந் தேதி.


Next Story