எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
மூடுபித்ரி அருகே தாய் செல்போன் தரமறுத்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு:-
பள்ளி மாணவி
தட்சிண கன்னடா மாவட்டம் மூடுபித்ரி தாலுகா வால்பாடி அருகே உள்ள நாகதாதா கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் பூஜாரி, தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளன. இதில் மூத்த மகள் யூதி (வயது 17). இவர் அலியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். யூதி ெசல்போனுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர் அடிக்கடி கண்டித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல தந்தை உமேஷ் பூஜாரி வேலைக்கு சென்றுவிட்டார். மேலும் தாய் சகோதரியை டியூசனில் விடுவதற்காக சென்றிருந்தார். யூதியை அழைத்தபோது, அவர் மறுத்துவிட்டார். மேலும் செல்போன் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்கொலை
இதில் கோபப்பட்ட யூதி, வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். இதை பார்த்த தாய், இளைய மகளை மட்டும் அழைத்து ெசன்றார். இந்நிலையில் வெளியே
சென்றுவிட்டு தாய் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, யூதியை காணவில்லை. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். அவர்கள் தெரியவில்லை என்று கூறிவிட்டனர்.
இறுதியாக வீட்டின் அருகேயிருந்த கிணற்றிற்கு சென்று பார்த்தார். அங்கு யூதி பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், யூதியின் பிணத்தை பார்த்து மூடுபித்ரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்்த போலீசார் யூதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்போனால் விபரீதம்
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் யூதி செல்போனுக்கு அடிமையானதும், அடிக்கடி தாயிடம் செல்போன் கேட்டு தகராறு செய்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் செல்போன் கேட்டபோது, தாய் கொடுக்க மறுத்ததால் விரக்தியடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து யூதியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மூடுபித்ரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி செல்போன் கொடுக்கவில்லை என்றதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.