வேறொருவரை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்ததால் கர்ப்பிணி கத்தியால் குத்திக்கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்


வேறொருவரை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்ததால் கர்ப்பிணி கத்தியால் குத்திக்கொலை; முன்னாள் காதலன் வெறிச்செயல்
x

வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்த கர்ப்பிணியை முன்னாள் காதலன் குத்திக்கொன்ற பயங்கரம் விஜயநகரில் நடந்துள்ளது.

பெங்களூரு:

காதல்

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா துக்காவதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீபா(வயது 25). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வந்த ஹனுமந்தா(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அதையடுத்து பெற்றோரின் பேச்சைக் கேட்ட பிரதீபா, ஹனுமந்தாவுடனான காதலை முறித்துக் கொண்டார். மேலும் அவர் தனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரைச் சேர்ந்த நாகராஜ் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையே பிரதீபா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் துக்காவதி கிராமத்தில் உள்ள துக்கம்மா தேவி கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதை காண்பதற்காக துக்காவதி கிராமத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு பிரதீபா தனது கணவர் மற்றும் மகனுடன் வந்திருந்தார். அவர் தனது குடுபத்தினருடன் நின்று தேரோட்டத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஹனுமந்தா, தான் வைத்திருந்த கத்தியால் பிரதீபாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த பிரதீபாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹரப்பனஹள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் விஜயநகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது.

சிறையில் அடைப்பு

இந்த படுகொலை சம்பவம் குறித்து ஹலுவாகலு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹனுமந்தாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொண்டு தன் கண்முன்னே சந்தோஷமாக இருப்பதை பார்த்து சகித்துக் கொள்ள முடியாமல் அவர் இந்த படுபாதக செயலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஹனுமந்தாவை கைது செய்தனர். மேலும் பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஹனுமந்தாவை விஜயநகர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story