மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் பேட்டி


மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் பேட்டி
x

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயார் நிலையில் உள்ளது என்று மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் கூறியுள்ளார்.

சிக்கமகளூரு:-

காங்கிரசில் குழப்பம்

சிக்கமகளூருவில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி வேட்பாளர் யார் என்பது கூட தெரியாத நிலையில் பிரசாரம் நடந்து வருகிறது. கட்சியில் உள்ள கருத்துவேறுபாடுகளால் புதிய உறுப்பினர்களை கூட சேர்க்க முடியாமல் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா இதுவரை எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை தெளிவாக கூற முடியவில்லை. அவரது செயல்பாட்டால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சித்தராமையா மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் திகார் சிறையில் இருந்தவர். முன்னாள் மந்திரி ஜார்ஜ் மீது இன்னும் வழக்கு உள்ளது. இவ்வாறு காங்கிரசில் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பின்னணி உள்ளது. ஆனால் அவர்கள் பா.ஜனதாவின் மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர். பா.ஜனதா இந்த விமர்சனங்களை கண்டு கொள்வது இல்லை.

சிறப்பான ஆட்சி

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பாவின் வழிகாட்டுதலின் படி பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு இடங்களிலும் பா.ஜனதாவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலை பா.ஜனதா சந்திக்க தயாராக உள்ளது. 150 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜனதா ஆட்சியை அமைக்கும்.

அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் ஒரு கோடி தொண்டர்கள் வீடுகளில் காவி கொடியை கட்டவேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 15 லட்சம் காவி கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக இந்த பணிகள் நடந்து வருகிறது.

பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்

மேலும் மக்களிடம் பா.ஜனதாவின் வளர்ச்சி திட்டங்களை எடுத்து கூறும் வகையில், மாவட்ட வாரியாக பா.ஜனதா தரப்பில் சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. பல்லாரி, கலபுரகி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் பெங்களூருவிலும் இந்த கூட்டம் நடைபெறும். இதனால் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கு அதிகமாகும்.

ஆனால் காங்கிரஸ் இந்த செல்வாக்கை சீர்குலைக்க முயற்சிக்கிறது. மங்களூருவில் சமீபத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பெண் டாக்டர் ஒருவரை மதமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. போலீசார் விசாரணைக்கு பின்னர் 2 பேரும் பயங்கரவாத அமைப்பில் இருப்பது தெரியவந்தது. இதனை பா.ஜனதா அரசு கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதே பா.ஜனதாவின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story