கர்நாடகத்தில், தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்ய கூடாது- மாநில போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு
கர்நாடகத்தில், ஆவணங்கள் பரிசோதனை என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்ய கூடாது என்று போலீசாருக்கு, போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மீண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில், ஆவணங்கள் பரிசோதனை என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்ய கூடாது என்று போலீசாருக்கு, போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மீண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி...
பெங்களூருவில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஆவணங்கள் பரிசீலனை என்ற பெயரில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்துவதற்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டு இருந்தார்.
அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியபடி வாகன ஓட்டிகள் வந்தாலோ, மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து சோதனை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
போலீஸ் டி.ஜி.பி.க்கு புகார்
ஆனாலும் போலீஸ் டி.ஜி.பி.யின் உத்தரவை பெங்களூருவில் போக்குவரத்து போலீசார் பின்பற்றவில்லை. இதன் காரணமாக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு, மீண்டும் வாகன ஓட்டிகள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் பெங்களூருவில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூரு உள்பட மாநிலத்தில் ஆவணங்கள் பரிசீலனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்துவது மற்றும் விதிமுறைகளை மீறி இருக்கும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் பெறுவது குறித்து குற்றச்சாட்டு எழுந்தது.
சோதனை செய்ய கூடாது
இந்த விவகாரத்தை மந்திரி அரக ஞானேந்திரா தீவிரமாக எடுத்து கொண்டாா். மேலும் வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் தடுத்து நிறுத்தி போலீசார் தொந்தரவு கொடுக்க கூடாது என்றும், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய கூடாது என்று போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை
போலீஸ் துறைக்கு இதற்கு முன்பு நான் பிறப்பித்திருந்த உத்தரவை பின்பற்றாமல் ஆவணங்கள் பரிசீலனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை வழிமறித்து சோதனை நடத்துவதாக புகார்கள் வந்துள்ளது.
எனவே தேவையில்லாமல் வாகன ஒட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தி தொந்தரவு கொடுக்க கூடாது. இதுபோன்ற வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, அவசியமானதாகி விடும் என்றார்.