மத கலவரங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை
மத கலவரங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மங்களூரு-
மத கலவரங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரிகளிடம் ஆலோசனை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மேற்கு மண்டல போலீஸ் அலுவலகத்தில் நேற்று மந்திரி பரமேஸ்வர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார், மேற்கு மண்டல் ஐ.ஐி. சந்திரகுப்தா, மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ரிஷ்யந்த் (தட்சிண கன்னடா), விஷ்ணுவர்தன் (உத்தர கன்னடா), அக்ஷய் (உடுப்பி), உமா பிரசாத் (சிக்கமகளூரு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மந்திரி ஜி.பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளை சேர்ந்்த நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு மங்களூருவுக்கு வருவதில்லை. காரணம் மங்களூருவில் எப்போதும் நிலுவும் பதற்றமான சூழ்நிலை தான். இங்கு அமைதியும், மத நல்லிணக்கமும் இல்லை. மாவட்டம் முழுவதும் மத கலவரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதனை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத கலவரங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரு பகுதியில் நடந்த குற்றச்சம்பவங்கள் பற்றி உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தட்சிண கன்னடா மாவட்டத்தில் மத கலவரத்தில் இறந்த தீபக் ராவ், பசில், ஜலீல், மசூத் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படும். இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் கடலோர பகுதியை போதைப்பொருள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். மங்களூருவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காப்பாற்ற நாம் கைகோர்க்க வேண்டும். மத நல்லிணக்கத்திற்காக நான் பாதயாத்திரை சென்றுள்ளேன்.
போலீசார் மீது நடவடிக்கைமங்களூருவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும்.
கடலோர பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். அந்த நிலைமையை போலீஸ் அதிகாரிகள் மாற்ற வேண்டும். மதநல்லிணக்கத்தை காக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மந்திரி பரமேஸ்வர் கூறினார்.