கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம்


கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம்
x

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு:-

ஊதிய விகிதம்

கர்நாடகத்தில் சுமார் 25 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடுகின்றன. இதில் பெங்களூருவில் மட்டும் 7 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு பஸ்களில் தினமும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்துக்கு பஸ்களை நம்பியே உள்ளனர் . இந்த போக்குவரத்து துறையில் 1¼ லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

அந்த ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. ஆனால் அரசு அளித்த உறுதிமொழியின் படி நடந்து கொள்ளவில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் கூறுகிறார்கள். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் சம்பள உயர்வு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை நிறுத்தம்

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டால் அது அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும் அன்றாடம் பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.


Next Story