பி.யூ.சி. தேர்வு எழுதிவிட்டு காணாமல் போனதாக தேடப்பட்டவர்: காதலனை திருமணம் செய்த மாணவி போலீசில் தஞ்சம்
கொள்ளேகால் அருகே பி.யூ.சி. தேர்வு எழுதிவிட்டு காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவி, காதலனுடன் திருமணம் செய்து போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார்.
கொள்ளேகால்: கொள்ளேகால் அருகே பி.யூ.சி. தேர்வு எழுதிவிட்டு காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவி, காதலனுடன் திருமணம் செய்து போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளர்.
பி.யூ.சி. மாணவி மாயம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா தேரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா, இவரின் மகள் நாகரத்னா என்று மஞ்சு (வயது 19). பி.யூ.சி. 2-ம் படித்து வந்த இவர் கடந்த 14-ந் தேதி தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்து ஒரு காரில் ஏறி சென்றார். அந்த காரில் வாலிபர் ஒருவருடன் மாணவி சென்றதை அவரது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதாவது நாகரத்னா, தனது காதலனுடன் சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து நாகரத்னாவின் தாய் சிவம்மா அகரமாரம்பள்ளி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகரத்னாவை வலைவீசி தேடிவந்தனர்.
திருமண கோலத்தில்...
இந்த நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்ட நாகரத்னா கழுத்தில் தாலியுடன் கணவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- நானும், ஹாசனை சேர்ந்த சதீசும் காதலித்து வந்தோம். இதை முதலில் காதலன் வீட்டில் கூறினோம். அதற்கு அவர்கள் எனது பெற்றோரிடம் அனுமதி கேட்டு வரும்படி கூறினார்கள்.
அதன்படி நான் எனது பெற்றோரிடம் சதீசுடன் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டேன். ஆனால் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்துவைக்கவில்லை. இதனால், நானும் சதீசும் வெளியே சென்று கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.