அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்


அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
x

கடப்பா அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை பணி இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரவை திரும்ப பெறும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

மங்களூரு:-

ஆசிரியர்கள் பணி இடமாற்றம்

தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா கவ்ராடி கிராமத்தை அடுத்த இச்சலம்பாடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது.

90 மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 6 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையி்ல் நேற்று முன்தினம் ஆசிரியர்கள் 2 பேரை மாவட்ட கல்வித்துறை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதை அறிந்த மாணவர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியின் முன்பு கூடி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

உத்தரவை திரும்ப பெறவேண்டும்

அப்போது மாணவர்கள் கூறுகையில், பணி இடமாற்றம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களையும் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும். விரைவில் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் ஆசிரியர்களை பணி இடமாற்றம் செய்தால் எப்படி படிப்பது. புதிய ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை எப்படி புரிந்து கொள்வது. தேர்வில் அனைவரும் தோல்வியடைய நேரிடும். எனவே கல்வித்துறை நிர்வாகம் ஆசிரியர்களை பணி இடமாற்றம் செய்த உத்தரவை திரும்ப பெறவேண்டும்.

இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஆசியர்களின் பணி இடமாற்றம் குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று வகுப்பிற்கு சென்றனர்.இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story