அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அதிகாரிகளின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்...!


அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அதிகாரிகளின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்...!
x

பீகாரில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தங்கள் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாட்னா,

பீகாரில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை ஆத்திரத்துடன் அடித்து நொறுக்கினர்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹ்னார் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இருக்கை வசதிகள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் இல்லாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் சிலரை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் வாகனத்தின் மீது பெண்கள் செங்கல் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மஹ்னார் துணைப் பிரிவு அதிகாரி நீரஜ் குமார் கூறுகையில்,

'பள்ளி வகுப்பறைகளின் கொள்ளளவை விட மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. உட்கார இடம் கிடைக்காத மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஷிப்டுகளாக பள்ளியை நடத்த முயற்சி செய்து வருவதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் உறுதி அளித்தார். இதன்பின்னர் மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story