அறிவியல் பாடத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும்
அறிவியல் பாடத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்று கர்நாடக அறிவியல், தொழில்நுட்ப இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஹலகூர்:-
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே யட்டம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு துறை இயக்குனர் பசவராஜ் கலந்துகொண்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
அறிவியல் பாடங்கள் எப்போதும் சுவாரசியமாக இருக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் அறிவியலை கற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஞ்ஞானிகளாக மாற வேண்டும். நம் அன்றாட வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகள் அறிவியலுடன் தொடர்புடையது. அப்படி தான் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளால் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது. முன்பு நகர்புறங்களில் மட்டும் தான் டிஜிட்டல் வசதிகள் இருந்தன. தற்போது கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் வசதி உள்ளது. உலக நிகழ்வுகளை உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளது இந்த அறிவியலும், தொழில்நுட்பமும். இதனை நாம் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.