இம்பீரியல் இரட்டை கோபுரத்திற்குள் ஸ்டண்ட் வீடியோ; 2 ரஷிய யூ-டியூபர்கள் கைது
மராட்டியத்தில் இம்பீரியல் இரட்டை கோபுரத்திற்குள் நுழைந்து ஸ்டண்ட் வீடியோ எடுக்க சென்ற 2 ரஷிய யூ-டியூபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தின் டார்டியோ பகுதியில் இம்பீரியல் இரட்டை கோபுரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் ரஷிய நாட்டை சேர்ந்த யூ-டியூபர்களான 2 பேர் சாகச வித்தைகளை மேற்கொள்ளும் ஸ்டண்ட் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்வதற்காக இந்த பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து மும்பை போலீசார் ஐ.பி.சி.யின் 452 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதனை போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர்.
இதன்படி, அவர்கள் இருவரும் ரோமன் புரோஷின் (வயது 33) மற்றும் மேக்சிம் ஸ்கெர்பாகோவ் (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இவர்களது கைது பற்றியும், அவர்களது குற்ற செயல் பற்றியும் ரஷிய தூதரகத்திற்கு, போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரும் கோபுரங்களில் ஒன்றின் படிக்கட்டு வழியே மேலே சென்று 58-வது தளத்தின் வெளியே இருந்தபடி ஸ்டண்ட் காட்சிகளை படம் எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
எனினும், 58-வது தளத்திற்கு செல்லும்போது, பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்த காவலர்கள் அவர்களை பார்த்துள்ளனர். இதன்பின்னர் மேல் தளத்தில் இருந்த பாதுகாவலர் தகவல் அறிந்து அவர்களை ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட கூடாது என கூறியுள்ளார்.
அவர்களை பிடிக்க 6 பாதுகாவலர்கள் சுற்றி வளைத்து விட்டனர் என தெரிந்ததும் தப்பியோடுவதற்காக, 5-வது தளம் வரை கீழே வந்து விட்டனர். பின்னர், கோபுரத்தின் பின்புறத்தில் இருந்து கீழே குதித்ததில் இருவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டு உள்ளது.
எனினும், அவர்களில் ஒருவர் சிக்காமல் தப்பி விட்டார். ஆனால், போலீசாரிடம் சிக்கிய, காயமடைந்த நண்பருக்காக, அதுவும் போலீசார் கேட்டு கொண்டதன் பேரில், மற்றொரு நபர் சரண் அடைந்து உள்ளார்.