ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ., சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு


ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ., சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு
x

ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சிவலிங்கேவுடா எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை திடீரென சந்தித்து பேசினார். காங்கிரசில் சேருவது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தினார்கள்.

பெங்களூரு:-

குமாரசாமியுடன் மோதல்

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சிவலிங்கேவுடா. இவருக்கும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாசனில் நடந்த பஞ்சரத்னா யாத்திரையிலும் சிவலிங்கேகவுடா பங்கேற்காமல் இருந்தார்.

இதையடுத்து, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அரிசிகெரே தொகுதியில் சிவலிங்கேகவுடாவுக்கு பதிலாக, வேறு நபரை வேட்பாளராக நிறுத்த குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதனால் தொகுதி மக்களுடன் ஆலோசித்து விட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகுவேன் என்று சிவலிங்கேகவுடா தெரிவித்திருந்தார்.

சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை, சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ. திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது காங்கிரசில் சேருவது குறித்து தனது விருப்பத்தை சித்தராமையாவிடம் சிவலிங்கேகவுடா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சட்டசபை தேர்தலில் அரிசிகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் கொடுக்கும்படியும் சித்தராமையாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்கு சித்தராமையாவும் சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதும் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சிவலிங்கேகவுடா சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் சிவலிங்கேவுடா காங்கிரஸ் கட்சியில் சேருவது உறுதியாகி உள்ளன. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறும் வேலைகளை கையில் எடுத்துள்ளனர்.


Next Story