லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்


லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்
x

மாடால் விருபாக்‌ஷப்பாவின் மகன் லஞ்சம் வாங்கியபோது கைது செய்த லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:-

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா, அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் லஞ்ச வழக்கில் சிக்கி உள்ளனர். இந்த வழக்கில் மாடால் விருபாக்ஷப்பா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் பெங்களூரு கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

முன்னதாக பிரசாந்த் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அவரை, லோக் அயுக்தா துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமோத் குமார், இன்ஸ்பெக்டர் குமாரசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது குழு தான், பிரசாந்த் வீட்டில் சோதனை நடத்தி ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில் லோக் அயுக்தா துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமோத் குமார், இன்ஸ்பெக்டர் குமாரசாமி ஆகிய 2 பேரும் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தோணி ஜான், இன்ஸ்பெக்டர் பாலாஜி பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். லஞ்சம் பெற்ற விவகாரத்தை கையும், களவுமாக பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story