பத்ராவதி அருகே ஒரே கிராமத்தில் 200 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்; அசுத்த குடிநீரை குடித்ததால் பாதிப்பா?


பத்ராவதி அருகே ஒரே கிராமத்தில் 200 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்;  அசுத்த குடிநீரை குடித்ததால் பாதிப்பா?
x

பத்ராவதி அருகே ஒரே கிராமத்தில் 200 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்த குடிநீரை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சிவமொக்கா;

200 பேருக்கு வாந்தி-மயக்கம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் மைதொளலு எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மைதொளலு கிராமத்தை சேர்ந்தவர்கள் திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உடல்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி 3 நாட்களில் கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் வாந்தி-மயக்கம், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதாவது கடந்த 11-ந்தேதி 60-க்கும் மேற்பட்டோர், அதற்கு அடுத்த நாட்களில் 140-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேர் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் அனைவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

கழிவுநீர் கலந்ததா?

இதற்கிடையே அப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்கதொட்டி ஒன்று உள்ளது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் செல்லும் நிலத்தடி குழாயில் விரிசல் ஏற்பட்டு கழிவுநீர் கலந்ததாகவும், அந்த குடிநீரை குடித்து கிராமத்தை சேர்ந்த 200 பேருக்கும் வாந்தி-மயக்கம், உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுகாதாரத்துறையினர் ஆய்வு

இந்த சம்பவம் அறிந்து பத்ராவதி சுகாதாரத்துறை அதிகாரி அசோக் தலைமையிலான குழுவினர் மைதொளலு கிராமத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு கழிவுநீர் கலந்துள்ளதா என்று பரிசோதனை நடத்தினர்.

மேலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தண்ணீரை மறுஅறிவிப்பு வரும் வரை கிராம மக்கள் குடிக்க வேண்டாம் என்றும், குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்துதருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராய்ச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசுத்த குடிநீர் குடித்த 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story