முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகராக சுனில் கனுகோலு நியமனம்; கேபினட் அந்தஸ்தும் வழங்கப்பட்டது


முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகராக சுனில் கனுகோலு நியமனம்; கேபினட் அந்தஸ்தும் வழங்கப்பட்டது
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றிய சுனில் கனுகோலுவை முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகராக நியமித்து சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையா

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார். அவரது மந்திரியில் அவரை தவிர மீதமுள்ள 33 இடங்களும் நிரபப்பட்டு, அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த விஷயத்தில் பெரிய அளவில் அதிருப்தி எழவில்லை. அனைத்து விஷயங்களும் சுமுகமாக முடிந்துள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதே காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதல்-மந்திரியின் ஊடக ஆலோசகராக பிரபாகர் நியமிக்கப்பட்டார். அவருக்கு கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பிரபாகர், சித்தராமையா முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, அவரின் ஊடக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அதுபோல் சித்தராமையா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், அந்த பணியில் அவர் நீடித்தார்.

சுனில் கனுகோலு

இந்த நிலையில் முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகராக சுனில் கனுகோலுவை நியமித்து சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அவர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றினார். அவரது ஆலோசனையின் பேரில் தான் பா.ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

சமூக வலைத்தளங்களில் பா.ஜனதா அரசின் ஊழல்கள், தவறுகள், குறைகள் குறித்த கருத்துகள் வெளியிடப்பட்டன. இந்த விஷயங்களால் தான் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்களின் மனநிலை கட்டமைக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சுனில் கனுகோலுவின் ஆலோசனையால் தான் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக அரசியல் அரங்கில் பலரும் பேசிக்கொள்கிறார்கள். சுனில் கனுகோலுவுடன் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழரான சசிகாந்த் செந்தில் இணைந்து பணியாற்றினார். இதனால் தற்போது சுனில் கனுகோலுக்கு சித்தராமையா இந்த பதவியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.


Next Story