ராகுல் காந்தி மேல் முறையீடு வழக்கு: பர்னேஷ் மோடி, குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


ராகுல் காந்தி மேல் முறையீடு வழக்கு: பர்னேஷ் மோடி, குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 21 July 2023 11:49 AM IST (Updated: 21 July 2023 11:50 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 'மோடி' பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பின்னர் சூரத் மாவட்ட கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் ஐகோர்ட்டும் கடந்த 7-ந்தேதி தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டரீதியாக சரிதான் எனக்கூறிய நீதிபதி, அதை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 18-ந்தேதி ஆஜரான மூத்த வக்கீல் சிங்வி, இந்த மனுவை 21 (இன்று) அல்லது 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு 21-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்குப் பதில் அளிக்க பர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Next Story