மாதவிடாயின்போது விடுப்பு வழங்க கோரிய பொதுநல வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியைச் சேர்ந்த சைலேந்திர மணி திரிபாதி என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியைச் சேர்ந்த சைலேந்திர மணி திரிபாதி என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் அவர், "படிக்கிற மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தின்போது விடுப்பு வழங்கும் விதிகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்" என்று கோரி இருந்தார். இந்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "இது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால், மனுதாரர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறையிடுவது பொருத்தமாக இருக்கும். மாதவிடாய் காலத்தின்போது விடுப்பு அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டால், பெண்களை பணியமர்த்தும் ஊக்கத்திற்கு அது தடையாக அமைந்து விடும்" என்றும் கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டது.