அவதூறு வழக்கு: ராகுல்காந்தி வழக்கில் 20-ம் தேதி உத்தரவு
மோடி என்ற குடும்பபெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனு மீது சூரத் நீதிமன்றம் வரும் 20-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது.
சூரத்,
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அப்பீல் மனுவுடன் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்,
ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் வரும் 20-ம் தேதி உத்தரவு வழங்கிறது என தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்கில் குஜராத் அரசு, மனுதாரரான பாஜக எம்.எல்.ஏ புருனேஷ் மோடி பதிலளிக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராகுல்காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக மகாராஷ்டிர மாநிலம் புனே கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் பேசியபோது சாவர்க்கர் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை அவரது பேரன் சாத்யகி சாவர்க்கர் தொடர்ந்துள்ளார். இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் அவரது வக்கீல்கள் வழக்கு தொடுத்து உள்ளனர்.