சூரத்கல் சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும்- நளின்குமார் கட்டீல் எம்.பி. உறுதி


சூரத்கல் சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும்-  நளின்குமார் கட்டீல் எம்.பி. உறுதி
x

சூரத்கல் சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும் என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. உறுதி அளித்துள்ளார்.

மங்களூரு: சூரத்கல் சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும் என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. உறுதி அளித்துள்ளார்.

சூரத்கல் சுங்கச்சாவடி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல்லில் சுங்கச்சாவடி உள்ளது. அங்கிருந்து சிறுதொலைவில் மற்றொரு சுங்கச்சாவடி இருக்கிறது. இதனால் லாரி டிரைவர்கள், காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்பினர் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சூரத்கல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உண்டானது. இதற்கிடையே சமீபத்தில் இரவு, பகலாக காலவரையற்ற போராட்ட அறிவிப்பால் சூரத்கல் சுங்கச்சாவடியில் 200 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது போராட்டக்காரர்கள் சூரத்கல் சுங்கச்சாவடி அருகே இரவு, பகலாக காலவரையின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

இந்த நிலையில் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றகோரிய போராட்டத்தில் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனீர் கடிபல்லா என்பவர், வாக்குறுதி அளித்த காலத்திற்குள் சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் நளின்குமார் கட்டில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் வந்து சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று அறிவிக்க வேண்டும், இல்ையென்றால் வரும் நாட்களில் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

விரைவில் அகற்றப்படும்

இதுதொடர்பாக நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சுங்கச்சாவடியை மூடக் கோரி போராட்டம் நடத்தாதவர்கள், இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் மத்திய மந்திரியாக ஆஸ்கர் பெர்னாண்டஸ் இருந்தபோதும் சுங்கச்சாவடியை அகற்ற யாரும் கோரவில்லை. இதில் முழுக்க, முழுக்க அரசியல் உள்ளது. சட்டநடைமுறைப்படி சூரத்கல் சுங்கச்சாவடி விரைவில் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story