முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் புரசபை அதிகாரி தகவல்
பங்காருபேட்டையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் என்று புரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை புரசபையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரசபை நிர்வாக அதிகாரி சலபதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதிகாரிகள், புரசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக நாராயணசாமி எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்காருபேட்டையில் குற்றச்சம்பவங்கள், போக்குவரத்து விதிமுறைகளை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் இடங்கள் குறித்தும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து புரசபை நிர்வாக அதிகாரி சலபதி கூறுகையில், பங்காருபேட்டை டவுனில் குற்றச்சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.