மணிப்பூரில் பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை கலவர வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு நியமனம்
மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. சுமார் 100 பேர் பலியானார்கள்.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. சுமார் 100 பேர் பலியானார்கள்.
சில நாட்கள் ஓய்ந்திருந்த கலவரம், 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் தலைதூக்கியது.
இந்நிலையில், நேற்று கங்க்போக்பி மாவட்டம் சங்கைதெல் அருகே வன்முறை சம்பவம் நடந்தது. பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் அங்கு விரைந்தனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 6 வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற மணிப்பூர் மாநில அரசு சமீபத்தில் சிபாரிசு செய்தது.
மணிப்பூருக்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று அறிவித்தார். அவற்றில், 5 வழக்குகள் குற்றச்சதி தொடர்பானவை. ஒரு வழக்கு, பொதுவான சதி தொடர்பானது.
இந்நிலையில், மேற்கண்ட 6 வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை சி.பி.ஐ. அமைத்துள்ளது. டி.ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி தலைமையிலான அக்குழு, விசாரணை பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூருக்கு ரூ.101 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.