கருணை அடிப்படையிலான பணி நியமனம் நிறுத்திவைப்பு-கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அலுவலகங்களில் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை நிறுத்திவைக்கும்படி கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
சுற்றறிக்கை
கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைைம செயலர், கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கருணை அடிப்படையிலான பணி நியமன விவகாரத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களில் முதல் வகுப்பு உதவியாளர்கள், ஸ்டெனோகிராபர்கள் மற்றும் 2-ம் வகுப்பு உதவியாளர் பணியிடங்களை கருணை அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
கூடுதல் பணியிடங்களில் நியமனம்
ஆனால் சமீபத்திய வளர்ச்சியின் படி மண்டல ஆணையர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துக்களில் கருணை அடிப்படையிலானவர்களை கூடுதல் பணியிடங்களில் நியமித்து வருவது தெரியவந்துள்ளது.
இதுதொடர்ந்தால் நேரடி ஆட்சேர்ப்பு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் கருணை அடிப்படையில் நிரப்ப வாய்ப்பு உள்ளது.
கருணை அடிப்படையிலான...
இதனால் பணியின் தரமும் குறைகிறது. மேலும் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே மேற்கூறிய அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, மண்டல ஆணையரின் அறிக்கையின் படி மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து அலுவலகங்களில் கருணை அடிப்படையில் வேலைக்கு நியமிக்கப்படுவதை அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.