உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றரூ.2¼ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2¼ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு,-
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2¼ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தேர்தல் அதிகாரிகள் சோதனை
கர்நாடகத்தில் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை கவரும் வகையில் சேலை, சமையல் பொருட்கள் என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், பரிசு பொருட்கள் வழங்குவதை நிறுத்த முடியவில்லை.
இருப்பினும் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் சிக்கமகளூருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 2 இடங்களில் சோதனை நடத்தி, தங்கம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தங்க கட்டிகள் சிக்கின
அதாவது சிவமொக்கா-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரிகெரே சோதனை சாவடியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக சரக்கு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 9 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 30 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதை பார்த்த தேர்தல் அதிகாரிகள் டிரைவரிடம் தங்க கட்டிகள் எடுத்து செல்வதற்கான ஆவணத்தை கேட்டனர். ஆனால் டிரைவரிடம் ஆவணம் இல்லை. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாபிரசாத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தார். மேலும் இந்த தங்க கட்டிகளை கடத்த முயன்றதாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
664 சேலைகள் பறிமுதல்
இதுபோல் சிக்கமகளூரு டவுன் ஜெயநகர் பகுதியில் உள்ள தனியார் லாரி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 664 சேலைகள் பண்டல் பண்டலாக கட்டி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த சேலைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இவை அனைத்து குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து வாங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேலைகளை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்த தேர்தல் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.