முதியவரை திருமணம் செய்த தமிழக பெண் ரூ.2¼ லட்சம் நகை-பணத்துடன் ஓட்டம்


முதியவரை திருமணம் செய்த தமிழக பெண் ரூ.2¼ லட்சம் நகை-பணத்துடன் ஓட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முதியவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண், ரூ.2¼ லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

முதியவருக்கு 2-வது திருமணம்

பெங்களூரு காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. ரோட்டில் 62 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர், அச்சு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அந்த முதியவருக்கும், அவரது முதல் மனைவிக்கும் இடையே கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, முதியவருடன் வாழ பிடிக்காமல் முதல் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார். இதனால் அந்த முதியவர் தனியாக வசித்து வந்தார்.

பின்னர் திருமண புரோக்கர் முனியம்மா என்பவர் மூலமாக தமிழ்நாடு திண்டுக்கல்லை சேர்ந்த மல்லிகா (வயது 35) என்பவரை அந்த முதியவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். அதாவது தமிழ்நாடு திண்டுக்கல்லுக்கு முதியவரை முனியம்மா அழைத்து சென்று, மல்லிகாவை 2-வது திருமணம் செய்வது குறித்து பேசி இருந்தார். அதற்கு மல்லிகாவும் சம்மதம் தெரிவித்திருந்தார். பின்னர் கடந்த 4-ந் தேதி காட்டன் பேட்டையில் உள்ள முதியவரின் வீட்டில் வைத்தே மல்லிகாவை, அவர் திருமணம் செய்திருந்தார்.

நகை, பணத்துடன் பெண் ஓட்டம்

திருமணமான சில நாட்களே முதியவரும், மல்லிகாவும் சேர்ந்து வாழ்ந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மல்லிகா காணாமல் போய் விட்டார். அதே நேரத்தில் பீரோவில் இருந்த 64 கிராம் தங்க நகைகள், 700 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு முதியவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான நகை, பணத்துடன் மல்லிகா வீட்டை விட்டு ஓடியது அவருக்கு தெரியவந்தது. மல்லிகா பற்றி முனியம்மாவிடம் முதியவர் கேட்டதற்கும், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டார்.

மல்லிகாவை 2-வது திருமணம் செய்து வைக்க முனியம்மா ரூ.35 ஆயிரம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் முதியவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மல்லிகாவை வலைவீசி தேடிவருகிறார்கள். முதியவரை ஏமாற்றிவிட்டு அவரது 2-வது மனைவி நகை-பணத்துடன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story