இரவோடு இரவாக சீரமைக்கப்பட்ட தார் சாலை
பிரதமர் மோடியின் வருகை எதிதொலியாக உப்பள்ளியில் தார் சாலைகளை இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டுள்ளது.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வருகிற 12-ந் தேதி முதல் 26-வது வரை தேசிய இளைஞர் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உப்பள்ளி நகருக்கு மீண்டும் உயிரோட்டம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மாநகராட்சி சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கர்நாடகத்திற்கு பிரதமர் வருகை தரும்போதும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையொட்டிய சாலைகள் சீரமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வாய்ப்பு தற்போது உப்பள்ளி நகருக்கு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி கந்தகுந்தி, விஜயப்பூர் தேசிய நெடுஞ்சாலை, கேஷ்வாப்பூர் ரெயில்வே மேம்பாலம், கே.டி.சி கல்லூரி சாலை உள்பட பல்வேறு இடங்கள் இரவோடு இரவாக புதிதாக சாலைகள் போடப்பட்டன. மாநகராட்சியின் இந்த செயலுக்கு மக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல அனைத்து நேரங்களிலும் பணியாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த சாலை அடுத்து மழை வந்தால், மீண்டும் பெயர்ந்து போக வாய்ப்பு இருப்பதாக சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.