ஆசிரியர் நியமன ஊழல்; மாணிக் பட்டாச்சார்யா மனு மீது வரும் 17-ந்தேதி தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டு


ஆசிரியர் நியமன ஊழல்; மாணிக் பட்டாச்சார்யா மனு மீது வரும் 17-ந்தேதி தீர்ப்பு:  சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 15 Oct 2022 10:07 PM IST (Updated: 15 Oct 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மாணிக் பட்டாச்சார்யா மனு மீது வரும் 17-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்க துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில், பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து 49.80 கோடி ரூபாய் பணம், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மேற்கு வங்காள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அமலாக்க துறை தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதில், மேற்கு வங்காள முதன்மை கல்வி வாரிய முன்னாள் தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மாணிக் பட்டாச்சார்யா என்பவரை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து அமலாக்க துறை விசாரித்தது. இதனடிப்படையில், அவரை அமலாக்க துறை கடந்த 11-ந்தேதி கைது செய்தது.

இந்த வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு, மாணிக் பட்டாச்சார்யாவை சி.பி.ஐ. முன் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாணிக் பட்டாச்சார்யா மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்பின்பு, அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக மாணிக் பட்டாச்சார்யா உள்ளார் என கோர்ட்டில் சி.பி.ஐ. அமைப்பு தெரிவித்து உள்ளதுடன், இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உள்ளது என்றும் தெரிவித்தது.

எனினும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பினை வருகிற 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் ஆகியோர் கொண்ட அமர்வு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மனு மீது உத்தரவு பிறப்பிக்க உள்ளது.


Next Story