வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை


வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் விஷம் குடித்து ஆசிரியை தற்கொலை
x

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விஜயநகர்:-

காதல் திருமணம்

விஜயநகர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பசம்மா என்ற ரூபா(வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அந்த பள்ளியை அர்ஜூன் என்பவரின் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். மேலும் அர்ஜூன் தனது பள்ளியிலேயே ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பசம்மாவுக்கும், அர்ஜூனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி காதலித்து வந்தனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நாள் முதலே அர்ஜூன், தனது மனைவியை கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே சம்பவத்தன்றும் தம்பதி இடையே வரதட்சணை வாங்கி வருவது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு பசம்மா சென்றுள்ளார். பின்னர், பள்ளியின் ஒரு அறைக்கு சென்ற பசம்மா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடிதம் சிக்கியது

இதுகுறித்து பள்ளி காவலாளி கொடுத்த தகவலின் பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், வரதட்சணை கேட்டு கணவர், அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வருவதால், தற்கொலை செய்து கொள்வதாக கூறி இருந்தார்.

அந்த கடிதத்தின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே மகள் சாவுக்கு அர்ஜூன் மற்றும் அவரது குடும்பம் தான் காரணம் என ஆசிரியையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story