தொழில் நுட்ப கோளாறு; நடுவழியில் சிக்கிய ஏர் ஏசியா இந்தியாவின் 2 விமானங்கள்

டெல்லியில் இருந்து கிளம்பிய ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 2 விமானங்கள் நடுவழியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு திரும்பியுள்ளன.
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 2 விமானங்களில் நடுவழியில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து அந்த 2 விமானங்களும் மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளன.
இதுபற்றி விமான பயணி ஒருவர் கூறும்போது, டெல்லி-ஸ்ரீநகர் விமானம் ஐ5-712 நேற்று காலை 11.55 மணியளவில் புறப்பட்டது. விமானம் பறந்து சென்ற அரை மணிநேரத்தில் நடுவழியில், விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது என விமானி கூறினார்.
இதனை தொடர்ந்து, மதியம் 1.45 மணியளவில் பயணிகள் அனைவருடனும் விமானம் பாதுகாப்பாக டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியது என கூறியுள்ளார்.
இதன்பின்னர், இறக்கி விடப்பட்ட பயணிகளை மீண்டும் ஸ்ரீநகர் கொண்டு சென்று சேர்ப்பதற்காக விமான நிறுவனம், மற்றொரு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
இதன்படி, பயணிகள் அனைவரும் வி.டி.-ஆர்.இ.டி. என்ற பதிவெண் கொண்ட மற்றொரு விமானத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், 2வது விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது என விமானி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 2வது விமானமும் மாலை 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியது.
இதுபற்றி ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, தொழில் நுட்ப கோளாறால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற விமானம் டெல்லிக்கு திரும்பியது. கோளாறு சரி செய்யப்பட்டு விமான இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பயணிகளின் பயண திட்டங்களுக்கு ஏற்பட்ட இடையூறு மற்றும் பாதிப்பு ஆகியவற்றுக்காக வருந்துகிறோம். பயணிகள் விரும்பினால் பயண ரத்து செய்து விட்டு, விமான பயண கட்டணங்களை திரும்பி பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளார்.