தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சீரானது
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு கர்நாடகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சீரானது.
பெங்களூரு:
ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
பெங்களூரு, துமகூரு, சிவமொக்கா, தாவணகெரே உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 24-ந் தேதியும், நேற்று முன்தினமும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 108 ஆம்புலன்ஸ் சேவை குத்தகை அடிப்படையில் செய்து வரும் ஜி.வி.கே. அமைப்பின் கால் சென்டர் மையத்தில் ஏற்பட்டு இருந்த மதர் போர்டுவில் தொழில் நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், 108 என்ற எண்ணுக்கு பொதுமக்களால் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டதால், நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இதையடுத்து, தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணிகளில் தொழில் நுட்ப குழுவினர், என்ஜினீயர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டார்கள். அதைத்தொடர்ந்து, தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவில் இருந்தே 108 ஆம்புலன்ஸ் சேவை சீரானது. பொதுமக்கள் 108 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஜி.வி.கே. அமைப்பின் கால் சென்டருடன் அழைப்பு இணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நோயாளிகளை அழைக்க ஆம்புலன்ஸ் வேன்கள் சென்றன.
வைரஸ் தாக்குதல்
இதனால் 2 நாட்கள் கடும் அவதிக்கு உள்ளான நோயாளிகள் வழக்கம்போல் போல் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையில், ஜி.வி.கே. கால் சென்டர் அலுவலகத்தில் உள்ள மதர் போர்டுவில் வைரஸ் (ரேன்ட் சம்வேர்) தாக்குதல் நடத்தி இருப்பதால், 108 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதை தொழில் நுட்ப குழுவினா் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரத்தில் ஜி.வி.கே. கால் சென்டரில் உள்ள மதர் போர்டு, 2008-ம் ஆண்டுக்கான பழைய மென் பொருள் (சாப்ட்வேர்) என்பதால், புதிய மென்பொருள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மந்திரி சுதாகர் பேட்டி
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில், 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்படுவதற்கு, தொழில் நுட்ப கோளாறுகள் முக்கிய காரணமாகும்.
நேற்று (நேற்று முன்தினம்) மாலையில் இருந்தே ஆம்புலன்ஸ் சேவை சீரானது. ஜி.வி.கே. அமைப்பில் உள்ள பழமையான மதர் போர்டு மற்றும் மென்பொருளை மாற்றிவிட்டு புதிய மதர் போர்டு மற்றும் மென்பொருள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள் பாதிக்கப்படாத வண்ணம் மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது, என்றார்.