பிளஸ்-2 மாணவிக்கு கஞ்சா பயன்படுத்த கற்றுக்கொடுத்த வாலிபர் கைது


பிளஸ்-2 மாணவிக்கு கஞ்சா பயன்படுத்த கற்றுக்கொடுத்த வாலிபர் கைது
x

சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டு பிளஸ்-2 மாணவிக்கு கஞ்சா பயன்படுத்த கற்றுக்கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், தனக்கு கஞ்சா கிடைக்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை கண்ட மட்டான்சேரியை சேர்ந்த ஒரு நபர், கோதமங்கலத்தில் உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு, அங்கு சென்று சென்றால் கஞ்சா கிடைக்கும் என்று மற்றொரு பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மேலும் கஞ்சாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்து, அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரதீப், அந்த நபர் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர், மட்டான்சேரி அருகே புத்தன்புரா வீட்டை சேர்ந்த பிரான்சிஸ் நெவின் அகஸ்டின்(வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் கலால் பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனையிட்டபோது, 3 கிராம் கஞ்சா சிக்கியது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரான்சிஸ் நெவின் அகஸ்டினை எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து திருச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஐஸ்வர்யா டோங்கரி கூறும்போது, கைதான நபர் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவறான நோக்கத்துடன் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்களுக்கு கஞ்சா கிடைக்கும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, முற்றிலும் ஒழிக்கப்படும். இதுபோன்ற தவறான வழிகளை இளைஞர்கள், இளம்பெண்கள் பின்பற்றி செல்லக்கூடாது என்றார்.


Next Story